×

தமிழின் முதல் வரலாற்று போர்ட் கேம்!

‘ஹாரி பாட்டர்’, ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’, ‘டிஸ்னி இளவரசிகள்’, ஏன் கடைசியாக உலகம் முழுக்க டிரெண்டான ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரீஸ்களை அடிப்படையாகக் கொண்ட பிளஃப் கேம் அல்லது போர்ட் கேம்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் குறிப்பாக ஒரு புதினத்தையோ அல்லது ஒரு திரைப்படத்தையோ அடிப்படையாகக் கொண்ட போர்ட் விளையாட்டுகள் இல்லை. டிஜிட்டலில், மொபைலில் கூட திரைப்படம் பின்னணியிலான கேம்கள் நிறைய இருப்பினும், ஒரு குடும்பமாக நண்பர்களாக ஒன்றிணைந்து விளையாட கார்ட் கேம் அல்லது கேரம் போன்ற பழைய விளையாட்டுகளே இன்றளவும் உள்ளன. ஆனால் அந்த காத்திருப்பைத் தான் முடித்து வைத்திருக்கிறார் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தீபிகா அருண். பிரம்மாண்ட ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை மையமாகக் கொண்ட போர்ட் கேம் உருவாக்கியிருக்கிறார் தீபிகா அருண். ‘எனக்கு சொந்த ஊர் சென்னைதான். தஞ்சாவூர், சாஸ்த்ரா யுனிவர்சிட்டியிலே சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்சிட்டு ஐடியிலே வேலை. என்னவோ அங்கே இருந்த கார்பரேட் பாலிடிக்ஸ் எல்லாம் எனக்கு செட்டாகவே இல்ல. அடுத்து ஸ்கூல்ல டீச்சரா வேலைக்கு சேர்ந்தேன். அங்கேயும் ஸ்டாஃப் ரூம் பாலிடிக்ஸ் கொஞ்சம் இடையூறா இருந்தது. அப்பறம் என் சகோதரர் கூட இணைஞ்சி ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் கம்பெனி ஆரம்பிச்சோம். சரி சொந்த பிஸினஸ்தான் நமக்கு செட்டாகும்னு தோணுச்சு. அதன் கூடவே எனக்கு டீச்சிங் மேலே இருந்த ஆர்வம் காரணமா ஜூலா என்கிற குழந்தைகளுக்கான வாழ்க்கை, சமூக பழக்கவழக்கங்கள் குறித்த வகுப்புகள் எடுக்கறேன். அதாவது குழந்தைகளுக்கான பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகள். அங்கேதான் எனக்கு இந்த போர்ட் கேம்கள் நிறைய உதவியா இருந்தது. சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலமாகவே குழந்தைகளுக்கு கிளாஸ் எடுப்பேன். அதிலே இந்த குழந்தைகளுக்கான போர்ட் கேம்கள் நிறைய எனக்கு அறிமுகமாச்சு. எனக்கும் அந்த விளையாட்டு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு’ என்னும் தீபிகா அருண் தொடர்ந்து எப்படி ‘பொன்னியின் செல்வன்’ போர்ட் கேம் உருவாக்கினார் எனப் பகிர்ந்தார்.‘மூணு வருஷங்களுக்கு முன்னாடி நிறைய ஆங்கில ஆடியோ புத்தகங்கள் கேட்டுட்டு இருந்தேன். ஆனால் அதையே தமிழுக்குன்னு தேடும்போது தமிழ் நாவல்கள், புதினங்கள், புத்தகங்களுக்கான ஆடியோ புத்தகம் கிடைக்கலை. ஏன் நாமளே ஆரம்பிக்கக் கூடாதுன்னு பாட்கேஸ்ட்ல கதைகள் சொல்ல ஆரம்பிச்சேன். என்னுடைய டீச்சிங் ஆர்வம்தான் அதற்கு கைகொடுத்துச்சு. ‘கதையோசை’ என்கிற பாட்கேஸ்ட்ல நிறைய நாவல்கள், புதினங்களை கதைகளா சொல்ல ஆரம்பிச்சேன். தினம் ஒரு அத்தியாயம். அதிலே இந்த நாட்டுடைமை ஆக்கப்பட்ட புதினங்களான ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொய்மான் கரடு’ இப்படி நிறைய கதை சொல்லிட்டு இருந்தேன். அப்போ கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படம் ஷூட்டிங் ஆரம்பம்ன்னு வந்த நேரம் அத்தனை பேரும் இந்தப் புதினத்தைக் கதையா சொல்லுங்களேன்னு நிறைய கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு எட்டு மாசத்துக்கு மேலே தினம் ஒரு அத்தியாயம் பொன்னியின் செல்வன் கதை சொல்லிட்டு இருந்தேன். ஏற்கனவே போர்ட் கேம் மேலே ஆர்வம் உண்டு. மேலும் படிச்சது, வேலை அனுபவம் இப்படி டிஜிட்டல், கம்ப்யூட்டர் டிசைனிங் எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து ஏன் ‘பொன்னியின் செல்வன்’ போர்ட் கேம் உருவாக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதுவும் ஒரு எட்டு மாசமா பாட்கேஸ்ட்க்காக ‘பொன்னியின் செல்வன்’ கூடவே டிராவல் செய்திருக்கேன். அந்த எண்ணம்தான் இன்னைக்கு விளையாட்டாகவும் இப்போ வியாபாரமாகவும் மாறியிருக்கு’ பொன்னியின் செல்வன் போர்ட் கேம் எப்படி தயாரானது? எப்படி விளையாட வேண்டும்? மேலும் தொடர்ந்தார் தீபிகா அருண். ‘தமிழ் வரலாறு, நம்மளுடைய கதை. இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு. என் உறவினர் வித்யா வெங்கடேசன் அவங்க இலுஷ்ட்ரேஷன் ஆர்டிஸ்ட். அவங்க உதவியோடு ஒவ்வொரு கேரக்டருக்கும் கார்டுகள் உருவாக்கினோம். மொத்தம் ஒன்பது கேரக்டர்கள் அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டையார், பூங்குழலி, ரவிதாசன், கந்தமாறன், இவர்கள்தான் கேம் கேரக்டர்கள். முழுக்க முழுக்க அக்காலத்து பொன்னியின் செல்வன் புதினத்தில் ஓவியர் மணியம் வரைஞ்ச ஓவியங்களைத்தான் நாங்க அடிப்படையா வெச்சு இந்தக் கார்டுகள் டிசைன் செய்தோம். அதிலும் யார் யாருக்கு என்னென்னா ஸ்பெஷலோ அதைக் கார்டில் பார்க்கலாம். நந்தினி என்றாலே அந்த வாள் ஞாபகம் வரும், அந்தக் கார்டில் வாளும், தலையில் ஆண்டாள் ஸ்டைல் கொண்டை பார்க்கலாம், வந்தியத்தேவனுடனேயே ஒரு குதிரை இருக்கும், அந்தக் குதிரையையும் வந்தியத்தேவன் கார்டில் பார்க்கலாம். அருள்மொழிவர்மன் பின்புறம் யானை, குந்தவையின் ஸ்பெஷல் கிரீடம், மற்றும் தலை அலங்காரம், பூங்குழலி படகோட்டி அதனால் பின்புறம் லைட் ஹவுஸ் பார்க்கலாம். மேலும் அந்தந்தக் கேரக்டர்களுக்கென தனி கலர்களும் கொடுத்திருப்போம். நந்தினி என்றாலே வஞ்சகம். அதனால் சிவப்பு நிறம், ரவிதாசன் ஒரு கொலையாளி அதனால் கிரே கலர், இப்படி அதையும் பார்த்து டிசைன் செய்திருக்கோம்’ எப்படி விளையாடலாம் என்றதும் குடும்பமாக நம்மையும் சேர்த்துக்கொண்டு ஒரு சிறு விளையாட்டே ஆட வைத்தனர் தீபிகா அருண் குடும்பத்தார். ‘இந்த கேம் விளையாட 14 வயசுக்கு மேலே இருக்கணும். காரணம் துரோகம், கொலையாளி, திருட்டு, ஏமாற்றம் இப்படி நிறைய விஷயங்கள் இதிலே இருக்கறதால் குழந்தைகளுக்கு வேண்டாம்னு முடிவு செய்துட்டோம். ஆறு பேர் வரை இந்த கேம் விளையாடலாம். இதில் காயின்கள் கிட்டத்தட்ட சோழர்கால தங்க நாணயங்கள் மாதிரி டிசைன் செய்திருப்போம். ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு கார்டு. ஒருவேளை உங்களுக்கு வந்தியத் தேவன் கார்டு வந்தால் நீங்க இன்னொருத்தர் வைச்சிருக்க கார்டு இதுவாக இருக்கலாம்னு யூகிச்சு அது சரியா இருந்தா அவங்க காயின்களை எடுத்துக்கலாம். ஒருவேளை நந்தினி கார்ட் வந்தா இன்னொரு ஆட்டக்காரர் கிட்டே இருந்து ரெண்டு காயின்களை திருடிக்கலாம். ஒருவேளை உங்க கிட்ட அருள்மொழிவர்மன் கார்டு இருந்தால் ரெண்டு கேரக்டர்கள் கார்டு மாத்திக்கலாம். இப்படி போகும் விளையாட்டில் கடைசியில் யாரிடம் கார்டுகள், காயின்கள் இருக்கோ அவங்கதான் வின்னர். கேம்க்கான முழு விவரங்களும், கேரக்டர்கள் டிடெய்ல்களும் கொண்ட ஒரு கார்டும் உள்ளேயே இருக்கும். இதன் மூலம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்காத நபர்களுக்குக் கூட எந்தெந்தக் கேரக்டர் என்னென்ன செய்யும், எப்படி கதையிலே பிளே செய்யும்ன்னு புரிஞ்சிக்கலாம்’ என்னும் தீபிகா அருண் இது போலவே தமிழ் புதினங்கள், வரலாற்றுப் புத்தகங்கள் என அத்தனையையும் போர்ட் கேமில் கொண்டு வர வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார். ‘இராமாயணம், மகாபாரதம், ஏன் கல்கி எழுதின மத்த புதினங்கள் உட்பட எத்தனையோ போர்ட் கேம்கள் நாம உருவாக்கலாம். அதுக்கான முயற்சியிலேயும் இருக்கேன். இந்த பொன்னியின் செல்வன் கேம் நல்லாவே விற்பனையும் ஆகுது. நிறைய ஃபாரின் ஆர்டர்கள் வருது. என் கணவர் அருண், என் மாமியார் உட்பட அத்தனை பேரும் எனக்கு சூப்பர் சப்போர்ட் அதனால்தான் இது சாத்தியமாச்சு’ சொல்கிறார் இந்த கேம் காதலி.    தொகுப்பு: ஷாலினி நியூட்டன்போர்ட் கேம் என்றால் என்ன?பெரும்பாலும் மேலை நாடுகளில் ஒரு பிரபல நாவலின் கேரக்டர்கள் அல்லது பிரபல திரைப்படங்களின் கேரக்டர்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த போர்ட் கேம்கள் விளையாடப்படும். ஒரு நாவலில் அல்லது திரைப்படத்தின் முக்கியமான 10 கேரக்டர்கள் எனில் அந்த பத்து பேருக்கான கார்டுகள் இருக்கும். ஒவ்வொரு கேரக்டர் கார்டிலும் அந்த கேரக்டரின் சிறப்பு சக்தி என்னவோ அல்லது சிறப்புத் திறன் என்னவோ அந்த திறனாக அந்தக் கார்ட் செயல்படும். இதை மையமாகக்கொண்டே 90களின் கிட்ஸ்கள் WWF கார்டுகள், கிரிக்கெட் கார்டுகள் என வைத்துக் கொண்டு விளையாடினார்கள். அதன் ஒரு வகையறாதான் இந்த போர்ட் கேம்….

The post தமிழின் முதல் வரலாற்று போர்ட் கேம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்